நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் வரும் ஜனவரி ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், 'நாளை மறுநாள் காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடிவு செய்யும் இந்த நீட் விலக்கு மசோதாவானது கிராமப்புற ஏழை மாணவர்களுடைய நலனுக்கு எதிராக இருப்பதாகவும், நீட் தேர்வை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நீட் சமூகநீதியை பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்வி சுரண்டப்படுவதை தடுப்பதாகவும் ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரின் இந்த கருத்து தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல. சட்டத்திற்கு அடிப்படையான கூறுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்க கூடியது அல்ல. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். ஆளுநரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட் தேர்வு பற்றிய உண்மைநிலை தெளிவாக விளக்கப்படும்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடந்த நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட நிலையில், நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவு தர முடியாது என கூட்டத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.