பாராளுமன்றத்தை காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் முடக்கியதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடந்தது. கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நடந்த உண்ணாவிரத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாராளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடக்கியதால் ரூபாய் 333 கோடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க ராஜ்நாத் சிங் உறுதி அளித்திருந்தார். மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கிடையாது. நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வேலையைத்தான் காங்கிரஸ் செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா,
நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் அல்ல. தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவதில் வெற்றி பெற்றதாக, அதனை ஒரு சாதனையாக அஇஅதிமுக கூறி வருகிறது. பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள அஇஅதிமுக மூலமாக நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முழுவதையும் முடக்கி அதன் மூலம் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதம் நடத்தியிருக்கலாம்.
அந்த விவாதம் நடைபெறாமல் தடுப்பதற்காகவே பாஜக அஇஅதிமுகவோடு ஒரு ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி இத்தகைய முடக்கத்தை அஇஅதிமுக மூலமாக செய்திருக்கிறது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்தை தடுத்தது பாஜகதானே தவிர காங்கிரஸ் அல்ல. காங்கிரஸ் கட்சி எப்போதுமே விவாதத்திற்கு தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத்தை முடக்கிய அஇஅதிமுகவுக்கு எதிராகத்தான் பாஜக உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அல்ல. இவ்வாறு கூறினார்.