பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சூர்யா சிவாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தமிழக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சூர்ய சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24/11/2021 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்பட்டு இருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் நான்காம் தேதி சூர்யா சிவா அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாக இருந்த நிலையில், பாஜகவில் மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. இதனால் அவர் ஏற்கனவே வகித்த பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வார் என அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.