முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு நினைவு நாணயம் ஆகஸ்ட் 18ந் தேதி வெளியிடப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த நாணயத்தை வெளியிட்டு கலைஞருக்கும் பாஜகவுக்குமான நெருக்கம் குறித்து விழா பேருரையாற்றுவார் என்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "1980-ம் ஆண்டு பாஜக துவங்கப்பட்டபோது, கட்சியின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், 'முதலில் தேசம்; அடுத்ததுதான் கட்சி. கடைசியில் தான் தனிநபர்' என்ற முழக்கத்தை முன் வைத்தார். பாஜகவினர் ஒவ்வொருவருக்கும் தன்னை விட, கட்சியை விட, பாரத தேசமே முக்கியம். அதுதான் பாஜகவின் அடிப்படை கொள்கை.
அதனால்தான், நேர் எதிரான கட்சிகளாக இருந்தாலும் பாஜக அனைத்து கட்சிகளுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகிறது. பாஜகவின் அந்த பாரம்பரியத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் நாகரிகத்தை எப்போதும் கடைபிடித்து வருபவர். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வழியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் மாற்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து, அவருடைய பெருமைகளை உழைப்பை, தியாகத்தை போற்றி வருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான அரசியல் சக்தி முலாயம்சிங் யாதவ். அவரது சமாஜ்வாதி கட்சியை எதிர்த்து தான் பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், முலாயம்சிங் யாதவுக்கு, பிரதமர் மோடி அரசு தான் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மவிபூஷன்' விருது வழங்கியது.
தேசிய அளவில் பாஜகவின் பிரதான எதிரியான, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது பிரதமர் மோடி ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி திமுக. ஆனாலும், 'ஊர் கூடி தேசம் என்ற தேரை இழுக்க வேண்டும்' என்பதற்காக,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் பிரதமர் மோடி மிகுந்த அன்புடன் நட்பு பாராட்டினார்.
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்கிற தமிழ் பண்பாட்டின் வழியில், அரசியல் மாச்சரியங்களை கடந்து, தமிழக முதல்வராக ஐந்து முறை பணியாற்றிய கருணாநிதி உடல்நிலை சரி இல்லாமல் இருந்தபோது, அவரின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை என்பதை இப்போது நினைவு கூர விரும்புகிறேன்.
கடந்த 2024 ஜூன் 3, கருணாநிதி அவர்களின் 101- வது பிறந்தநாளில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி. அறிவுக்கூர்மை காரணமாக பெரிதும் மதிக்கப்படுபவர். நானும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தபோது அவருடன் நடத்திய உரையாடல்களை நினைவு கூர்ந்து பார்க்கிறேன் என்று புகழஞ்சலி செலுத்தி இருந்தார் பிரதமர் மோடி.
அந்த அரசியல் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. பாஜக முன்னாள் தேசிய தலைவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தேர்தல் களத்தில் தான் நாம் எதிரிகள். இப்போது தேர்தல் முடிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைப்போம்" என தெரிவித்தார்.வெறும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் அதை காட்டுகிறார் என்பதைத்தான் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா காட்டுகிறது.
திமுக அரசை மிகக் கடுமையாக பாஜக தலைவர்கள் விமர்சித்தாலும், தமிழக மக்களை பொறுத்த வரை பாஜக தான் எதிர்க்கட்சி. திராவிட மாடல் சித்தாந்தத்தை, திராவிட மாடல் திமுக அரசின் தவறுகளை எதிர்ப்பதில் சமரசம் இல்லாமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பாஜக. ஆனாலும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுதான் பாஜக பின்பற்றும் அரசியல் பாதை " என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்.