நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசினர். இதில், பகுஜன் சமஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி பேசினார். அப்போது பாஜக எம்.பி.யான ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியைப் பார்த்து இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் அவதூறாக பேசினார். இதற்கு நாடாளுமன்றத்தின் உள்ளே கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரமேஷ் பிதுரிக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
டேனிஷ் அலி எம்.பி.யை குறிவைத்து அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையிலேயே கோரிக்கைவைத்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், ரமேஷ் பிதுரிக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், “இத்தகைய நடத்தை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் பிதுரி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. ரமேஷ் பிதுரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘அவை நடவடிக்கைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்றும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய டேனிஷ் அலி எம்.பி., “நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியான எனக்கே இந்த நிலை என்றால், அப்போது சாமானிய மக்களின் நிலை எப்படி இருக்கும்? எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். அவைத் தலைவர் இது குறித்து விசாரணை மேற்கொள்வார் என்று நம்புகிறேன். இல்லையென்றால், நான் எனது பதவியை துறப்பது குறித்து ஆலோசிப்பேன். என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சந்தித்து ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது காங்கிரஸின் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் உடன் இருந்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “வெறுப்பு சந்தையில் அன்பின் கடை” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள டேனிஷ் அலி, “என்னுடைய மன உறுதியை அதிகப்படுத்தவும், தனது ஆதரவை தெரிவிக்கவும் ராகுல் காந்தி வந்திருந்தார். நான் தனியாக இல்லை என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் என்னுடன் நிற்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.