சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். என்பிஆர் அவசியம், தேவை, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி பரப்பப்படுகிறது. அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்சிஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை; அதுகுறித்து ஆலோசித்துதான் வருகின்றனர். நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன்; எந்த சட்ட விரோத தொழிலும் செய்யவில்லை." இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் பேட்டி குறித்து பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும் போது, சரியான கருத்தை நடிகர் ரஜினி கூறியுள்ளார். நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் குடியுரிமை பறிக்கப்படாது என்பதை உறுதியாக கூறியுள்ளனர். அதோடு,பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளிலிருந்து மதரீதியாக வஞ்சிக்கப்பட்ட அந்நாடுகளின் சிறுபான்மையினர் சில ஆயிரம் பேருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. யாரின் குடியுரிமையும் பறிக்கப்படவில்லை. பிரிவினைக்கு முந்தைய நிலைமையைக் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் வாயிலாக மேற்கொள்கின்றனர். இதனை ரஜினிகாந்த் சரியாகப் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார். இது பாராட்டுக்குரிய விஷயம்" என எச்.ராஜா கூறினார்.