கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 54 போலீசார் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் கரோனா பரிசோதனை நடைபெற்றது. கோவில் உள்ளே முழுவதும் கிருமிநாசினி அடிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது. யாரேனும் வெளிநாடு சென்று வந்துள்ளனரா என்பது குறித்தான பயண விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவின் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பட்டருக்கும், சிவாச்சாரியாருக்கும் வித்தியாசம் தெரியாத தேசவிரோத, இந்து விரோத ஊடகங்கள் பொய் பரப்புகிறது. கெட்டிக்காரன் புளுகு 8 நாள் அல்ல 8 மணிதான்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.