நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பா.ஜ.க. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் மஞ்சு பார்கவிக்கும், மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக பெண் நிர்வாகி மஞ்சு பார்கவி (வயது 38) நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரன் தன் நெஞ்சில் கை வைத்து தள்ளினார்’ என பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பா.ஜ.க.வின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தபோது, பார்கவி அதிக ஆட்களை அழைத்து வந்ததாக கணக்கு காட்டி பணம் பெற்றதாகவும், இது தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.