உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. கடும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், பா.ஜ.க. முடிவின் ஆரம்பம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மற்றும் பீகார் மாநிலத்தின் அராரியா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது. தொடக்கத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது.
ஆனால், அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் அம்மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க. கடும் பின்னடைவைச் சந்தித்தது. தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பிரவீன் நிசாத் 26,510 வாக்குகள் முன்னிலையிலும், அதே கட்சியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் பூல்பூர் தொகுதியில் 29,474 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருக்கின்றனர். அதேபோல, பீகார் மாநிலம் அராரியா தொகுதியிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் சர்ஃபராஜ் அலாம் 16,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இந்த மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க. கடும் பின்னடைவைச் சந்தித்தது.
Great victory. Congratulations to Mayawati Ji and @yadavakhilesh Ji for #UPByPolls The beginning of the end has started
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2018
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மிகப்பெரிய வெற்றி. உ.பி. இடைத்தேர்தல் வெற்றிக்கு அகிலேஷுக்கும், மாயாவதிக்கும் வாழ்த்துகள். முடிவுக்கான ஆரம்பம் இது’ என பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் இடைத்தேர்தலில் மாயாவாதி பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அவரது மறைமுக ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்துள்ளதும் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.