ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
எந்த தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அந்த நாளில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல் செலவினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெரிய தேர்தல்களுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், அடுத்த 6 மாதங்களுக்கு தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலும் நடக்க வாய்ப்பில்லை என்பதால் மற்ற மாநிலத் தேர்தல்களுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.