பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கூறி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது “சைதை சாதிக் பேசும்போது நாக்கை வெட்டுவேன் என்றார். அதேபோல் ஒரு சம்பவம் கட்சிக்குள் நடக்கும்போது அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுத்தார். திருச்சி சூர்யாவை இடைநீக்கம் செய்தார். ஆனாலும் திருச்சி சூர்யாவின் விலகல் கடிதத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையே இப்படிப் பேசுகிறார். அப்பொழுது நாமும் பெண்களைத் தவறாகப் பேசலாம் என்ற எண்ணத்தைத்தான் கட்சியில் இருக்கும் மற்றவர்களுக்கும் இது கொடுக்கும்'' எனப் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபியின் அரசியல் ஆரோக்கியமான அரசியலாக மோடிஜியின் திட்டங்கள், மோடிஜியின் சாதனைகள் மூலம் வளர்ச்சி என இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார் ரூமில் அட்டூழியங்கள், சுயவிளம்பரம் மட்டுமே இருக்கிறது’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி ஆரோக்கியமான அரசியல் ஆரோக்கியமான மோடி ஜி திட்டங்கள் மோடிஜியின் சாதனைகள் மூலம் வளர்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார்ரூமில் அட்டூழியங்கள் சுய விளம்பரம் மட்டுமே.
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayatri_Raguram) January 12, 2023