நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, அருப்புக்கோட்டை தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:
கே.கே.எஸ்.எஸ்.ஆர். (திமுக) – வைகைச்செல்வன் (அதிமுக) – உமாதேவி (ம.நீ.ம.)
எம்.ஜி.ஆரை எம்.எல்.ஏ. ஆக்கி, 1977இல் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த தொகுதி அருப்புக்கோட்டை. தற்போது, அரசியலில் சீனியரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திமுக வேட்பாளராகவும், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அதிமுக வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
பெயர் சொல்லி அழைத்து, தோளில் கை போட்டு பேசும் ‘அண்ணாச்சி’, இத்தொகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். ‘பா.ஜ.க. - அதிமுக கூட்டணி தமிழகத்தில் உயிர் பெற்றுவிடக்கூடாது..’ என்று நாள் தவறாமல் பிரார்த்தனை செய்துவரும் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்குச் செல்வது இவரது பலம். ஆனாலும், மருமகள் ஒருவர் ‘தங்கச் செருப்பு’ அணிந்துவந்தார் என்று பெருமையாகச் சொல்லப்படும் ‘ஜெயவிலாஸ்’ குடும்பத்திலிருந்து, ம.நீ.ம. வேட்பாளராகப் போட்டியிடும் உமா தேவி பிரிக்கும் ‘தெலுங்கு’ வாக்குகள், இவருக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை ஈடுகட்டும் விதத்தில் முத்தரையர் ஆதரவு வாக்குகள் இருக்கின்றன.
திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், உமாதேவி பின்வாங்கவில்லை. அதேநேரத்தில், உமாதேவியின் சொந்தபந்தங்களே, ‘ம.நீ.ம. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு யாரும் என் வீட்டு வாசல்படி ஏறக்கூடாது. மீறினால் மரியாதை இல்லை’ என்று கதவில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் வேண்டுமானால் மதம், ஜாதி அடையாளத்தை விரும்பாதவராக இருக்கலாம். இத்தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளருக்கு, அவருடைய ஜாதி அடையாளமே ‘ப்ளஸ்’ ஆக இருக்கிறது.
2011இல் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, வைகைச்செல்வன் கொடுத்த பச்சை டோக்கனை, இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். ஏரியாவுக்கு ஒரு வாக்குறுதியாக ரூ.2000, ரூ.3000 என நிர்ணயித்து, அந்த டோக்கனைத் தந்துள்ளனர். அப்போது குடியிருந்த வீட்டு வாடகையைக்கூட தரவில்லை என்ற தகவல் தொகுதியில் பரவிக்கிடக்கிறது. அதிமுக தரப்பு, பழைய விவகாரத்தை ஒத்துக்கொண்டு ‘தவறு செய்ததற்குத் தண்டனையாக தோற்கடித்து, ஐந்து வருட அரசியல் வாழ்க்கையில் எழுச்சி என்பதே இல்லாமல் செய்துவிட்டீர்களே!’ என்று எதிர்ப்பவர்களை ‘கூல்’ செய்கிறது.
‘அண்ணாச்சி 10 கோடி செலவழித்தால், நாங்க 20 கோடி செலவழிப்போம். ஓட்டுக்கு ரெண்டாயிரம் கூட தரமுடியும். தமிழ்நாட்டுல திமுக புள்ளிகளில் யார் யார் ஜெயிக்கக்கூடாதுன்னு 27 பேர் அடங்கிய ஒரு லிஸ்ட் வச்சிருக்கோம். அதுல அண்ணாச்சியும் ஒருத்தர். தேர்தல் அலுவலர்கள் இதுக்கு ஒத்துழைப்பாங்க’ என்று அதிமுக தரப்பில் ‘வெற்றி நிச்சயம்’ என்று ஒருவித கணக்கோடு பேசி வருகின்றனர்.
தேமுதிக வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். ஏற்கனவே அமமுக வேட்பாளரை அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றனர். அந்தப் புகைச்சல் வேறு கூட்டணி வாக்குகளுக்கு வேட்டு வைக்கிறது. நாம் தமிழர் வேட்பாளராக உமா போட்டியிடுகிறார்.
‘ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுங்க. ம.நீ.ம. வேட்பாளரை ஆதரித்து உங்க ஓட்டை வேஸ்ட் ஆக்காதீங்க. அமைச்சர் தொகுதியாக அருப்புக்கோட்டையை ஆக்குறது உங்க கையில்தான் இருக்கு.’ என்று திமுகவினர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்காக ‘கேன்வாஸ்’ செய்கின்றனர்.
இருதரப்பிலிருந்தும், கடைசி நேர பணப்பட்டுவாடா, வாக்கொன்றுக்கு ரூ.300-லிருந்து ரூ.500 வரை இருக்கும் என்று பேசப்படுகிறது. அண்ணாச்சி எளிதாகப் பெறக்கூடிய வெற்றியை, சவாலானதாக மாற்றிவிட்டார் உமாதேவி!