திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதியில் தங்களுக்கு சீட் வழங்க வேண்டுமென அதிமுகவில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏ.கே.எஸ்.அன்பழகன், ஜெயசுதா, நளினி மனோகரன், ஒ.செ. ராஜன் உட்பட பலர் கேட்டிருந்தனர். அந்த வரிசையில் தெற்கு மா.செவான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் சீட் கேட்டு மனு தந்திருந்தார். தொகுதி மாறி வந்து நிற்கும் அக்ரிக்கு சீட் வழங்கக்கூடாது என போளுர் தொகுதியில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் அதிமுகவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது அதிமுக தலைமை. இது போளுர் தொகுதி கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
“வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தபோது, வேளாண்மை அதிகாரியின் தற்கொலைக்கு அக்ரி.கிருஷ்ணமூர்த்தி காரணம் என அவர் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்காலே 2016இல் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சீட் வழங்கவில்லை. கட்சியைவிட்டு ஒதுக்கியும் வைத்திருந்தார். அப்படிப்பட்டவரை ஜெ. மறைவுக்குப் பின் கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் வழங்கியதோடு, 2019இல் எம்.பி சீட் தந்தார்கள். இப்போது எம்.எல்.ஏ சீட் தந்துள்ளார்கள். இது என்ன நியாயம்” என அத்தொகுதி அதிமுகவினர் கொதிக்கின்றனர்.
இந்நிலையில், போளுர் தொகுதியை எதிர்பார்த்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தற்போது வெளியாகியுள் பட்டியல் சசிகலா ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளது. “அவரை நாங்கள் கட்சியில் சேர்க்கமாட்டோம் எனச்சொன்னார்கள். அவரும் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிக்கைவிட்டார். ஆனால், பட்டியலில் சசிகலா ஆதரவாளர்கள்தான் நிறைய உள்ளார்கள். அக்ரி, சசிகலா ஆதரவாளர் என்பது கட்சியில் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவரை, தொகுதிக்கு சம்மந்தமில்லாதவரை போளூர் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். போளூர் தொகுதியில் அதிக வன்னியர் வாக்குகள். அப்படியிருக்க இந்தத் தொகுதியை முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தந்து, இந்த தொகுதியில் வாழும் வன்னியர்களைப் புறக்கணிக்கிறார்கள். இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரை சுயேட்சை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்கிறார்கள்.
கடந்த முறை திமுகவில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு எம்.எல்.ஏ சீட் தரவில்லையென சுயேட்சையாக நின்று 42 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்தமுறை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்யவுள்ளார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.