தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்குகிறது. இந்த நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இறுதிசெய்துள்ளன. அதைத் தொடர்ந்து, கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கும் பணியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு (ஐ.யூ.எம்.எல்) 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் தலைமையிலான குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.
அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (ஐ.யூ.எம்.எல்) கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் 'ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி போட்டியிடும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர். இதனால், மிகுந்த கவனம் பெற்றுள்ளது இந்த மூன்று தொகுதிகளும்.