கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.