அதிமுகவின் கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் இந்த இடைக்காலத் தடை செல்லாது என உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு அடிக்கடி கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உடன் ஓபிஎஸ் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகவும்இதற்காக தூது அனுப்பியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''எடப்பாடி பழனிசாமியுடன் சேரும் எண்ணம் அறவே இல்லை. வெளியான தகவல் முற்றிலும் தவறு. நான் ஏற்கனவே கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்று சொல்லிவிட்டேன். அதை அவர்கள் கேட்பதாக இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு நல்ல முடிவை எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.