பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு காரப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்த பிறகும், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் தமிழக அரசு செயல்படுகிறது. திமுக ஆட்சி வந்து 27 மாதங்கள் ஆகியுள்ளது. கிட்டத்தட்டப் பாதி ஆட்சிக்காலம் முடிந்துள்ளது. இதனை மதிப்பீடு செய்தால் பூஜ்ஜியம் தான் கொடுக்க முடியும். அதனால் மக்களின் குரலாக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இந்த ஆட்சியில் ஊழல் அதிகமாக இருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியுள்ளது. கனிம வளக்கொள்ளை, தடுப்பணைகள் கட்டுவோம் என திமுக அரசு சொன்னது; ஆனால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்துவைக்கவில்லை. மேகதாது அணை கட்டுவோம் தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று கர்நாடக அரசைக் கண்டிக்காத திமுக அரசு, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தூங்கிக்கொண்டு இருந்த நமது முதல்வர் மணிப்பூர் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டு 210 நாட்கள் ஆகிறது; ஆனால் அதை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. பெரம்பலூர் பகுதியில் வீட்டில் பட்டாசு வெடித்ததன் காரணமாக அங்கு இருக்கும் திமுக பிரமுகர் ஒருவர் போலீசாரை வைத்து மிரட்டி என் காலில் விழ வேண்டும் என்று சொல்லுவதாகக் கூறியிருக்கிறார். இதுதான் சமூக நீதியா? இங்கேயே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசும் மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்திருக்கும் கொடுமை நம்மையும் பாதித்திருக்கிறது; இது போன்ற ஒரு அநியாயம் இனி நடக்கக்கூடாது” என்றார்.
இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் பிரதமர் மோடி தங்கள் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள். அதே போன்றுதான் தமிழக மக்களும் விரும்புகிறார்கள். எங்களை பொறுத்தவரையில் பிரதமர் மோடி எங்கே போட்டியிட்டாலும் சந்தோஷம் தான்; அதிலும் தமிழகத்தில் போட்டியிட்டால் இரட்டிப்பு சந்தோஷம். ஆனால் தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது” என்றார்.