சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடி கம்பம் வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்த கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொது சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக நேற்று முன் தினம் (22-10-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்த விவகாரத்தில் பா.ஜ.க தொண்டர்கள் கைது செய்யப்படுவது பா.ஜ.கவிற்கு நல்லது தான். ஏனென்றால், பா.ஜ.க.வை பொறுத்தவரை தலைவர்கள் உருவாக்க முடியும். இதன் மூலம், தீர்க்கமான பா.ஜ.க தலைவர்கள் உருவாகுவார்கள். அரசியலில் எந்த கைதாக இருந்தாலும், அது கட்சியை வளர்க்குமே தவிர, அதை பின்னோக்கி எடுத்து செல்லாது. அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது. அதை இப்போது திமுக செய்து வருகிறது” என்று கூறினார்.