சிதம்பரம் (அரியலூர்) நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது, அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதனை நிறைவு செய்யும் சேவையும்தான் அரசியல் என்ற புரிதலோடு இந்த களத்திலே இந்த புனித பயணத்தை தொடருகிறோம். ஒரு தூய ஆட்சியை இந்த நாட்டிற்கு தர வேண்டும் என்பதால்தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது. இந்த கொள்ளைக்கூட்டத்தினரோடு கூட்டணி வைக்கவில்லை.
நமக்கு இவர்கள் என்ன தந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலத்தில் மீள முடியாத வறுமையை தந்திருக்கிறார்கள். அந்த வறுமையின் குழந்தையாக இருக்கக்கூடிய அறியாமை. அறியாமையின் குழந்தையாக நம்மிடையே இருக்கின்ற மறதி. இந்த மூன்றையும் பல ஆண்டுகளாக முதலீடாக வைத்து அரசியல் செய்கிறார்கள். கூட்டணி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கட்சியையும் எவ்வளவு தாக்கி கடந்த காலத்தில் பேசினார்கள். இன்றைக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கைக்காக வைத்திருக்கின்ற கூட்டணி அல்ல. இது வெறும் நோட்டணி, நோட்டுக்காக வைத்திருக்கின்ற சீட்டனி. இது தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கின்ற சனி, பினி. இதனை மாற்ற வேண்டும்.
இவர்கள் சாதனை என்பது மிக்சி, பேன், கிரைண்டர், சைக்கிள் கொடுத்தோம் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவை. ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவுக்கு வைத்திருந்ததுதான் இவர்கள் செய்த சாதனை. கலைஞர் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கொண்டுவந்தார். பிறகு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கொண்டு வந்தார். இந்த அளவுக்கு மக்களை வறுமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்து ஒரு அறிவிப்பு வருகிறது இலவச அரிசி என்று. ஏன் இந்த மக்களை வக்கத்துப்போனவர்களாக மாற்றிவிட்டார்கள். இதுதான் யதார்த்த நிலை. ஆனாலும் இவர்கள் சொல்லுவார்கள் சாதனை, சாதனை என்று.
தாலிக்கு தங்கம் என்று சொன்னார்கள். அரை பவுன் தங்கத்தைக்கூட தன் மகளுக்கு வாங்கிக்கொடுக்க முடியாத நிலைக்கு இந்த மக்களை இவர்கள் தள்ளிவிட்டார்கள். அரை பவுன் தங்கம் கொடுத்து சாதனை என்று சொல்லுகிறீர்கள். குடிக்க வைத்து இரண்டு லட்சம் பேரின் தாலியை அறுத்துள்ளீர்களே இதுவும் உங்கள் சாதனைதானே. அதை ஏன் பேசுவதில்லை.
கல்வியை தனியார் இடத்தில் கொடுத்தது அரசு. காசு உள்ளவன் தனியார் பள்ளியில், கல்லூரியில் படிக்கலாம். காசு இல்லாதவன் பள்ளி, கல்லூரியை வேடிக்கை பார்த்துவிட்டு போகலாம். இதுதான் நிலைமை. இந்த நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவத்தை இந்த அரசால் தர முடியவில்லை. ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை, தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கலைஞர் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை இராமச்சந்திரா, காவேரி மருத்துவமனைக்கு சென்றார். ஏன் அரசு மருத்துவமனைக்கு இவர்கள் செல்லவில்லை. தரமாக இல்லை. ஏன் இந்த கேள்வியை மக்கள் எழுப்பவில்லை.
ஆறாயிரம் ரூபாய் வங்கியில் போடுவதாக மோடி சொல்லுகிறார். கடந்த ஐந்து வருடத்தில் இதனை போட்டு முடித்திருக்கலாமே. அது ஏன் இந்த மாதம் தேர்தல் வரும்போது போன மாதம் போடுகிறீர்கள். ஓட்டுக்கு காசு. அதிலும் இரண்டாயிரம் போட்டுவிட்டு, நான்காயிரம் பாக்கி ஏன்? ஓட்டுப் போடுங்க தருகிறேன் என்றுதான் அர்த்தம். நம்மை கூலிக்கு மாறடிக்கிற கூட்டமாக்கிட்டாங்க. இங்க ராகுல்காந்தி 72 ஆயிரம் தருகிறேன். ஏன் என்று கேட்டால் ஏழைகளாகிவிட்டார்கள் என்கிறார். காங்கிரஸ் கட்சியால்தான் இந்த மக்கள் ஏழையானது. இவ்வாறு பேசினார்.