தமிழக பாஜகவில் இருந்து கடந்த சில நாட்களாக பலர் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு நல்லது. அப்போதுதான் புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்று அண்ணாமலை பேசியிருந்தார். அப்போது, தானும் ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவராக செயல்படுகிறேன் என்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் எப்படி தன்னை ஒப்பிட்டு பேசலாம் என்று கூறி அதிமுக தலைவர்கள் அண்ணாமலையைக் கடுமையாகச் சாடியிருந்தனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் என்றே தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். அதனால் யாரும் அதிமுகவில் இருக்கும் தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டு பேசினால் அது சரியானது அல்ல. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் பாஜகவின் தலைவராக இருக்கும் வரை இப்படித்தான் இருப்பேன். என்றைக்கும் மாறமாட்டேன்.
எனது கட்சியும் இப்படித்தான் இருக்கும். அப்படி இருந்தால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். 2026-இல் ஆட்சிக்கு வருவோம். இல்லையென்றால் அதற்கு அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவோம் என்று நான் சொல்ல விரும்பவில்லை. எனது தொண்டர்களையும் அப்படி தவறாக வழிநடத்த விரும்பவில்லை. நமது இலக்கை அடைய வேண்டும் என்றால் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். வலி, இரத்தம் என அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். விமர்சனங்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு முறையும் அண்ணாமலை வந்து பதிலளிக்க முடியாது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வளர்ந்த விதம் வேறு, பாஜக வளர்ந்து கொண்டிருக்கும் விதம் வேறு. அதனால் யார் கருத்து சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துகள். அதில் சரி, தவறு என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் நேற்று சொன்ன கருத்தில் இருந்து ஒரு படி கூட பின்வாங்கப் போவதில்லை. நான் ஜெயலலிதாவை யாருடனும் ஒப்பிட்டு பேசவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அரசியலில் ஒரு முடிவு எடுத்தால் தைரியமாக எடுக்க வேண்டும். தவறு நடந்தால் அதற்காகவும் நிற்க வேண்டும். ஜெயலலிதா துணிந்து தைரியமாக முடிவு எடுத்தார்கள்.
ஜெயலலிதாவிற்கு ஒரு தேர்தலில் டெபாசிட் போனது. அதற்காக அவர் பின்வாங்கவில்லை. துணிந்து நின்று அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதுதான் தலைவர். நானும் அப்படிப்பட்ட பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தைரியமாக எடுக்கும் முடிவை துணிந்து எடுத்து வருகிறேன் என்று சொல்வதற்காகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். பாஜக ஆட்சிக்கு வரும் காலம் வந்துவிட்டதாக உறுதியாக நம்புகிறேன். நான் என்னை யாருடனும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. அந்த அவசியம் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை எனது அம்மா ஜெயலலிதாவை விட 10 மடங்கு சக்திவாய்ந்தவர். எனது மனைவி 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர். ஒப்பீடு அதுவல்ல, ஒரு கட்சியின் தலைவராக அப்படி ஒரு எடுத்துக்காட்டு கொடுத்தேன்” என்றார்.