கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்குகின்றன.
இந்நிலையில், ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார்.
இது குறித்து தமிழ்நாடு பாஜக தரப்பில் விசாரித்தபோது, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க. தலைமை அந்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சரான தர்மேந்திர பிரதானையும் அவருக்குக் கீழே அண்ணாமலையையும் நியமித்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து விரைவில் அண்ணாமலையை நகர்த்துவதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது என்கின்றனர்.
அதே நேரம் கர்நாடக பாஜகவினர், அரசியல் நுட்பம் தெரியாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ‘ஷார்ட் டெம்பர்’ அண்ணாமலையை இங்கே எதற்கு நியமிக்கிறீர்கள் என்று எதிர்ப்புக்குரல் எழுப்ப, இவர் ஒப்புக்குச் சப்பாணிதான் என்று அவர்களை சமாதானப்படுத்தி மாநில அமைச்சர் ஒருவரையும் அங்கே களமிறக்கி இருக்கிறது பா.ஜ.க.
தமிழக அரசியலில் தன்னை பரபரப்பானவராகக் காட்டிக் கொண்டிருந்த அண்ணாமலையும் தன்னை கர்நாடகாவுக்கு அனுப்பியதில் குழம்பிப் போயிருக்கிறாராம்.