வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குக்கு இரண்டாயிரம் என்றும், பூத் செலவுக்கு 25 ஆயிரம் என தாராளமாக வாரி இறைக்கப்பட்டது. பூத்துக்குள் திமுக ஏஜென்ட்களை விலை பேசுங்கள் என மேலிடத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவு வந்திருந்தது, படியவில்லையென்றால் ஏதாவது பிரச்சனை செய்து அவர்களை வெளியேற்ற முயற்சித்து நம் விருப்பப்படி வாக்களிக்க வையுங்கள் என்றனர்.
அதன்படி ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பூத்தில் அதிமுகவினர், வாக்களிக்க வந்தவர்களிடம் வாக்குசாவடிக்குள்ளேயே, இரட்டை இலைக்கு போடுங்க என்றனர். அதிகாரிகளும் இதனை வேடிக்கை பார்த்தனர். திமுக ஊராட்சி செயலாளர் பழனி இதனை கேள்வி எழுப்பி ஆட்சேபனை தெரிவித்தார். திமுக முகவர் பிரச்சனை செய்கிறார் என போலீஸுக்கு அதிமுகவினர் தகவல் சொல்லி அவரை பூத்தில் இருந்து காவல்நிலையம் அழைத்து சென்று உட்காரவைத்தனர். திமுக நிர்வாகிகள் போலீஸாரிடம் கேள்வி எழுப்ப, அதன்பின் அவரை விடுவித்தனர்.