Skip to main content

‘அலட்சியத்தின் உச்சம்...’ - ரயில்வே தேர்வு ரத்தானதற்கு சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!

Published on 19/03/2025 | Edited on 19/03/2025

 

Su. Venkatesan strongly condemns the cancellation of the railway exam!

நாடு முழுவதும் தெற்கு ரயில்வேவில் உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு இன்று(19.3.2025) நடைபெறுவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ஒத்துவைக்கப்பட்டது. இதனிடையே இந்த தேர்வு எழுதுவதற்காக சுமார் தமிழகத்தைச் சேர்ந்த 6000 ஆயிரம் தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  மேலும், 1000 கி.மீ பயணம் செய்து எப்படித்  தேர்வு எழுத முடியும்? என்றும், அதற்கு பதில் தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தேர்வர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால், ரயிவே தேர்வு வாரியம்  எதற்கும் செவி சாய்க்கவில்லை. 

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 6000 தேர்வர்கள் தெலுங்கானாவிற்கு சென்று தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது இன்று காலை தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வுக்கான வேறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன், “போதுமான முன்னெச்சரிக்கைசெய்திடாமல் இருந்தது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம்.  ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.  அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சி யான தலையீடுகளை மேற்கொண்டோம், ஆனால் உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என பதில் அளித்தது. 

இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வகள் தேர்வெழுத சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். 

வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும். எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்