ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு, இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் பாஜக தற்போது இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் தென்னரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அண்ணாமலை இ.பி.எஸ்ஸை இடைக்காலப் பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டிருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.