தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று (25-10-23) ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் நடந்தது. அதனால், அந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அதன் பின்னர், கோவை விமான நிலையத்தில் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டனர். தமிழகத்தில் குருபூஜைக்கு சென்றால், பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திமுக அந்த அளவிற்கு மாற்றி வைத்திருக்கிறது. திராவிடத்தை பற்றி ஆளுநர் கூறியது எந்த தவறும் இல்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் மறைக்கப்பட்டு உள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை இருட்டடிப்பு செய்து திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கிறார்கள். எனவே, ஆளுநரை வம்புக்கு இழுக்கும் போக்கை திமுகவினர் கைவிட வேண்டும்.
என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கும் வீரலட்சுமி யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே வீரலட்சுமி, கோவில்பட்டியில் சுதந்திரத்திற்காக போராடிய வீராங்கனை வீரலட்சும் மட்டும் தான் தெரியும். யார் வேண்டுமானாலும், ஊழல் பட்டியலை வெளியிடலாம். அதனால், நான் ஊழல் செய்திருந்தால், அவர் தாராளமாக வெளியிடலாம்.
எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். பிரதமர் பதவிக்கு என ஒரு மரியாதை இருக்கிறது. எனவே, மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். பிரதமர் மோடி தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார். திராவிடம் என்பது என்ன என்று திமுகவினருக்கே தெரியாது. ஆரியர்கள் என்று யாரும் இந்தியாவில் இல்லை. திமுக இருக்கக்கூடிய ‘இந்தியா’ கூட்டணியில் ஆரியர்கள் இருந்தால் அந்த கூட்டணியில் இருந்து திமுக வெளியே வர வேண்டும்” என்று கூறினார்.