Skip to main content

சி.வி.சண்முகம் உட்பட அதிமுகவை கடுமையாக தாக்கி பேசிய அண்ணாமலை! 

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Annamalai Condemn ADMK including CV Shanmugam!

 

பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். 

 

விழுப்புரத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “அண்ணாவுக்கு ஆதரவாக வருபவர்கள் அண்ணாவின் வழி நடந்துகொள்கிறார்களா. அப்படி நடந்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். கருத்தை கருத்தாக மட்டுமே பார்க்கவேண்டும். சரித்திரத்தை மறைத்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பா.ஜ.க. யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் அல்ல; எங்களை பொறுத்தவரை எல்லோரும் மனிதர்கள்தான். முத்துராமலிங்க தேவர் சனாதனத்திற்காக என்ன பேசினார் எனச் சொல்வது எனது கடமை. இன்னும் 50 வருடத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதிவிட்டீர்கள் என்றால் பிறகு சரித்திரத்தை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். மதுரை மீனாட்சி அம்மன் குறித்து இழிவாக பேசும்போது முத்துராமலிங்க தேவரின் கருத்து என்பதை நான் பதிவு செய்ய வேண்டும். யாரும் கடவுள் கிடையாது அனைவரும் மனிதர்கள் அப்படியான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். எனக்கு அடைமொழி கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காரணம் நான் மனிதன். 

 

அண்ணாவை நான் எங்கும் தவறாக பேசவில்லை. சரித்திரத்தில் அந்த சம்பவத்தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அதில் முத்துராமலிங்க தேவர் என்ன பேசினார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். நான் யாரின் அடிமையும் கிடையாது. அதேபோல், யாரும் எங்களின் அடிமையும் கிடையாது. நான் சொல்லும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. 

 

தனிக் கட்சி, தனி கொள்கை, சனாதன தர்மம் எங்கள் உயிர் மூச்சு. அதனைத் தற்காக்க முடியவில்லை என்றால் நான் ஏன் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இருகையில் அமர வேண்டும். சனாதன தர்மத்தைப் பற்றி பேசும்போது நான் உண்மையைப் பேசுவேன். 

 

இன்னும் பல விஷயங்களை சொல்ல முடியும். பெரியார் அடிவாங்கியதையும், அப்பொழுது அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் இருந்ததை எல்லாம் சொல்லமுடியும். ஆனால், நான் அதற்குள் எல்லாம் போகவிரும்பவில்லை. சரித்திரத்தை சரித்திரமாக பாருங்கள். 

 

இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் ஆகாது. நான் மரியாதை கொடுத்து அரசியல் நடத்துவேன். எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி.சண்முகம், மாலை ஆறு மணிக்கு முன்பாக ஒரு மாதிரியும், அதற்கு பிறகு ஒரு மாதிரியும் பேசுவார். ஆனால், அதனை நான் பேச விரும்பவில்லை. 10 ஆண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அதனால், நேர்மையை குறித்து சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. அவர் அமைச்சராக இருக்கும்போது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்; அதற்குள் நான் போக விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் விடமாட்டேன். இது தன்மானம் பிரச்சனை. பா.ஜ.க. சுயமரியாதை இருக்கக் கூடிய கட்சி. யார் காலில் விழுந்தும் இந்தக் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் இல்லை. 

 

கூட்டணி முக்கியம்; நான் அதிமுக மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவுக்கு விரோதமான கட்சி என்றெல்லாம் சொல்லமாட்டேன். அது அவர்களின் கொள்கை; இது எங்களின் கொள்கை. அடிப்படையில் அதிமுகவின் கருத்தை பாஜகவும், பாஜகவின் கருத்தையும் அதிமுகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு கட்சியையும் ஒன்றாக்கிவிடலாமே. கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. இதனை ஆறு மாதமாக மிக தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

 

கூனி கும்பிட்டு அதிகாரத்திற்கு வரவேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. நீங்கள் எல்லோரும் எப்படி அமைச்சராக இருந்தீர்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அதனைப் பற்றியெல்லாம் நான் பேசட்டுமா? 

 

சி.வி.சண்முகம் ஒரு விஷயத்தை பேசும்போது உணர்ந்து பேச வேண்டும். அரசியலில் சீனியர் ஜூனியர் எல்லாம் ஏது? அரசியலில் எந்த வயதில் வேண்டுமானாலும் பக்குவம் வரலாம். அண்ணாமலை புதுசு; நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன் என்கிறார்கள். அதற்காக உங்கள் காலில் விழ வேண்டுமா? அப்படியெல்லாம் விழ முடியாது. இது என்னுடைய அரசியல், பாணி, என் ஸ்டைல். இது இப்படி தான் இருக்கும். இஷ்டம் இருப்பவர்கள் உடன் இருங்கள். 

 

நான் யாரையும் எங்கையும் அவமானப்படுத்தவில்லை. குறைந்தும் மதிப்பிடவில்லை. ஆனால், வரலாற்றை வரலாறாகத்தான் பேசவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. 2024 தேர்தல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். 2026 தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பது அதனை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். யாருக்கும் பா.ஜ.க. தலைவணங்காது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்