அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் 18.7.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது. (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியாவாகும்.
இந்தக் கூட்டம் முடிந்த அதே நாள் மாலையில் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இதில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைப் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'ஒரு நாயிக்குப் புலியாக வேண்டும் என்ற ஆசையாம். அது தன்னுடைய நண்பரிடம் போய்க் கேட்டதாம். நான் எப்படிப் புலியாவது என்று கேட்டதாம். அதற்கு அந்த நாயின் நண்பர் சொன்னாராம், நீ புலி மாதிரிக் கோடு போட்டுக் கொண்டால் புலி என்று சொல்வார்கள் என்றதாம். உடனே அந்த நாய் புலி மாதிரி கோடு போட்டுக் கொண்டு வந்து, நானும் புலி என்று சொல்லியதாம். அப்படித்தான் இன்று எதிர்க்கட்சி நண்பர்கள் இந்தியா என்று சொல்லிக் கொள்வது இருக்கிறது.
மக்களுக்குத் தெரியும் உண்மையான இந்தியா யார்; உண்மையான பாரதம் யார்; உண்மையான என்டிஏ யார் என்று. இவர்களுடைய வேஷம் எல்லாம் இன்று வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. பிரிவினைவாதம் பேசியவர்கள்; காஷ்மீர் இந்தியாவிற்கு இல்லை என்று சொன்னவர்கள்; இந்தியாவிற்கு எதிராக ஜெ.என்.யூ வில் கோஷம் போட்டவர்கள். இவர்களெல்லாம் ஒரு ரூமில் ஒன்றாக உட்கார்ந்து 'இந்தியா' என்று சொன்னால் மக்கள் அவர்களை இந்தியா என்று ஏற்றுக் கொள்வார்களா?'' எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்திக்கையில், செய்தியாளர்கள் அண்ணாமலையின் இந்தப் பேச்சு குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தேர்தல் நேரத்தில் மக்கள் இதற்குப் பதில் சொல்வார்கள். இந்த கூட்டணிக்குப் பேரு இன்க்ளூசீவ் அலையன்ஸ். இந்தியா போன்ற பல ஜாதி, பல மொழி, பல இனம், பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கக் கூடிய அரசியல் தான் வெற்றி பெறும். இன்று அவர்கள் செய்கின்ற ஒரு பெரும்பான்மை மக்கள் என்ற உணர்வுகளைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்றலாம் என்கின்ற பாஜகவின் கனவு நிச்சயமாகத் தகர்ந்து போகும். அப்பொழுது தெரியும் அண்ணாமலைக்கு யார் புலி? யார் நாய்? என்பது. அதை இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.