ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன 12 பேரின் உயிருக்கு ஆளுநர் பொறுப்பேற்பாரா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் ஆளுநர் ஏன் இன்னும் கையெழுத்து இடவில்லை. அப்படியானால் ஏதோ ஒன்று இடையில் நடந்துள்ளது. ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறாரா? அந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவன தலைவர்களை ஆளுநர் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளதே அது உண்மையா? இந்த இடைக்காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 12 பேர் தற்கொலை செய்துள்ளார்கள் அதற்கு ஆளுநர் பொறுப்பேற்றுக் கொள்வாரா?” எனக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும். தர்மபுரி மிகவும் பின் தங்கிய மாவட்டம் அதனால் சிப்காட் அவசியம். காவிரியில் உபரியாக கடலில் கலக்கும் நீரினை பயன்படுத்த உபரி நீர் திட்டங்களை நிறைவேற்றுவது அவசியம். ஒகேனக்கலில் வெள்ள காலங்களில் வீணாகும் நீரினை கொண்டு தர்மபுரி மாவட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும். திருப்பூரில் வட இந்தியர்கள் தமிழ் இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்டியாலஜி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை கொண்டு வர வேண்டும்.” என்றும் கோரிக்கைகளை விடுத்தார்.