Published on 04/10/2019 | Edited on 04/10/2019
அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.இந்த பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் தமிழகத்திற்கு வரும் போது பேனர் வைக்க அதிமுக அரசு தீவிரமாக இருக்கிறது. இதனையடுத்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.மா.க இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் வருகைக்காக பேனர்கள் வைப்பதைத் தமிழக அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு தொடர்ந்து பேசிய அன்புமணி, பேனர் வைப்பது தேவையில்லாத செயல், பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும் கூறியுள்ளார். அன்புமணியின் இந்த கருத்தால் அதிமுகவில் ஒரு சிலர் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.