
பாஜகவில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகள் பாஜக நிர்வாகியின் பதிவுகள் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நேற்று பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி நிர்மல் குமார், “ திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” எனக் கூறியிருந்தார். தொடர்ந்து, இன்று பாஜகவிலிருந்து விலகிய திலீப் கண்ணன், ''கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? தான் பதவிக்கு வரும்போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்? இறைவனுக்கே வெளிச்சம். ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திடக்கூடாதுன்னு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்று வரை சீன் போட்டுட்டு இருக்கார்” எனக் கூறியிருந்தார்.
இதே சமயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேட்டபொழுது, “அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை அது தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. தேர்தல் களத்தில் ஒவ்வொருவர் மனநிலையைப் பொறுத்து அமையும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் இயக்கமாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்” என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல், தமிழ்நாடு பாஜக நிர்வாகியும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளருமான அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், “கூட்டணி கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறி கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள்.” எனக் கூறியிருந்தார்.
இரு கட்சிகளின் தலைவர்களும் இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுடன் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகம் இரு தரப்பு தொண்டர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளில் கூட்டணி பெயர் மாற்றப்பட்டு இருந்ததும் பதாகைகளில் பாஜக தலைவர்களின் புகைப்படங்களும் இல்லாமலும் இருந்தது. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பாஜக தலைவர்களின் புகைப்படங்களையும் அவர்களது பெயர்களையும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்தும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருக்கும் அமர்பிரசாத் ரெட்டியின் பதிவுகளும் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் அரசியல் களத்தில் வலுத்துள்ளது.