
‘திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்கவில்லை’ என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில், மீதமுள்ள 6 மாவட்டங்களில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும்.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தவில்லை. அதற்கான முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மருத்துவக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புகளைத் தமிழக அரசு தவறவிட்டு விட்டது. வெற்று வசனம் பேசிய திமுக அரசு 3 ஆண்டுகளை வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு தொடங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.