ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஓய்.எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார். ஆந்திர பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழக (ஏபிஐஐசி) தலைவராகவும் நடிகை ரோஜா உள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்க முயற்சித்ததாக வெளியான வீடியோ ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜாவிற்கும் சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர், ஒன்றிய குழு உறுப்பினர் அம்முலுவுக்கும் இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம தலைமை செயலகத்தை திறந்து வைக்க சென்ற ரோஜாவை அம்முலு ஆதரவு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. சொந்த கட்சியினராலேயே ரோஜாவின் கார் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, கூட்டத்தை கலைத்தனர். ரோஜாவை பத்திரமாக அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் தாக்குதல் தொடர்பாக ஐபிசியின் 143, 341, 427, 506, 509, 149 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இருந்தாலும் இதுவரை இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. சொந்த கட்சியினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ள ரோஜா தனது காரை தாக்க முயற்சித்தது தனது சொந்த கட்சியினர் இல்லை என்றும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம்தான் திட்டமிட்டு இதுபோல செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.