கடந்த அதிமுக ஆட்சியில் பட்ஜெட்டின்போது ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் கடந்த 3ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை திமுக அரசு மூடும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுக ஈடுபடுகிறது. அதிமுக ஆட்சியில் உருவாக்கியவற்றை எல்லாம் கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" என தெரிவித்திருந்தார். விழுப்புரத்தில் ஜெ. பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும் திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (19.07.2021) 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வெளியீடு தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கல்லூரி சேர்க்கை, ஆன்லைன் விண்ணப்ப தேதி தொடர்பாக பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில் கடந்த ஆட்சிக்காலத்தில் உங்கள் சொந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம்.. எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப ''அதை அப்புறம் பார்த்துக்கலாம். நிதிநிலை அறிக்கையில் பாருங்க'' என அமைச்சர் பொன்முடி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கக் கோரி வழக்குத் தொடர்த்துள்ளார். பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரை நியமிக்கக் கோரியும், கட்டுமானத்திற்கு விழுப்புரம் செம்மேடுவில் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் ஜெ. பல்கலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.