பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த 3 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தியிருந்தார்.
அந்த கடிதத்தில், 'நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்தாகும். பொதுத்துறை இந்தியாவை தொழில் மயமான தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் பங்கு வகிப்பவை. பொதுத்துறை நிறுவனங்களை அமைக்க மாநில அரசுகளின் நிலங்களுடன் மக்களிடமிருந்து நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை சிறு, குறு தொழில் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இது விலைமதிப்பற்ற அரசின் சொத்துக்கள் ஒரு குழு அல்லது ஒரு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செல்ல வழிவகுக்கும்' என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த இருப்பதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ல் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது.