சென்னை தி.நகரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திப்பது என்பது தனிப்பட்ட முடிவு அல்ல. அனைத்து நிர்வாகிகளிடம் பேசிய பிறகே எடுத்த முடிவு. தமிழகத்தின் நலன் சார்ந்துதான் கூட்டணி வைத்துள்ளோம். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் வரை எங்களது போராட்டம் ஓயாது. தமிழகத்தின் உரிமைகளை, இந்த மண்ணை, தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக கூட்டணி வைத்துள்ளோம். பத்து கோரிக்கைகளை தமிழக நலன் சார்ந்து அதிமுக அரசிடம் கொடுத்துள்ளோம்.
2011ல் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவித்தோம். தனித்து களம் இறங்கிய எங்களுக்கு 6 விழுக்காடு வாக்கு கிடைத்தது. 8 ஆண்டு காலம் தனியாக நின்றோம். ஆனால் தமிழக மக்களும், ஊடங்களும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. தமிழகத்தில் எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. பாமக மீது மட்டும் விமர்சனம் செய்யப்படுவது ஏன்.
கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என நாங்கள் கூறியதை மறுக்கவில்லை. தற்போது கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லை. எனவே வியூகத்தை மாற்றியுள்ளோம். அப்படிப்பார்த்தால் எந்த கட்சியும் யாருடனும் கூட்டணி வைக்க முடியாது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. திமுகவையும், ஸ்டாலினையும் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுகவை வைகோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விமர்சனங்கள் செய்த காரணத்தினால் கூட்டணி வைக்க கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? என்றார்.