இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில் நடந்த இந்த விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் உள்ளிட்ட காலியாக உள்ள 2 தொகுதிகளிலும், அ.தி.மு.க. அரசு இடைத்தேர்தலை நடத்தாது.
அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. மாநில அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வராது. இவ்வாறு அவர் பேசினார்.