தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பா.ம.க.வில் ஒரே ஒரு சீட்டுக்கு அன்புமணியை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பாமகவில் சில குரல்கள் கேட்டிருக்கு. தாமரை இலைத் தண்ணீர் போல் அ.தி. மு.க.வோடு ஏற்படுத்திக்கொண்ட தேர்தல் கூட்டணியால் உண்டான அதிருப்தியே இன்னும் கட்சித் தொண்டர்களிடம் குறையவில்லை.
இதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டுபோன, பா.ம.க. ஆதரவு உயர் அதிகாரிகள் சிலர், மக்களிடமும் கட்சியினரிடமும் பா.ம.க. மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை குறைக்க முயற்சி செய்யுங்கள். பா.ம.க.வுக்குக் கிடைக்கும் பதவியும் அதிகாரமும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கே போய்ச் சேர்வதை பா.ம.க.வின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் கூட ரசிக்கவில்லை. அதனால் உங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு ராஜ்யசபா சீட்டைக் கொடுங்கள். குறிப்பாக கட்சித் தலைவரான ஜி.கே.மணியை ராஜ்யசபாவுக்கு அனுப்புங்கன்னு ஆலோசனை செய்தார்களாம். இதைக் கேட்ட ராமதாஸ், நானும் அதைத்தான் செய்ய நினைக்கிறேன்னு சொல்லியிருக்கார்.
இந்தத் தகவல் ஜி.கே.மணியின் காதுக்குப் போக, அவரும் டெல்லி போகும் மூடுக்கு வந்துவிட்டாராம். கடைசியில் குடும்பத்தினரும் அன்புமணியும் கொடுத்த நெருக்கடியால், அன்புமணியையே ராஜ்யசபா வேட்பாளராக்கிவிட்டார் ராமதாஸ். இதனால் ’எங்கள் உழைப்பின் பலன் முழுதையும் தைலாபுரம் குடும்பம் மட்டுமே அனுபவிக்கணுமா? என பா.ம.க.வினர் அதிருப்தியில் இருக்க, டாக்டர் ராமதாஸோ சங்கடத்தில் இருக்கிறாராம். இதையறிந்த பா.ஜ.க. தலைமை, பா.ம.க.வில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.