கரோனா காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை அறிவித்திருக்கிற நிலையில் திருப்பூர் விவசாயி ராஜாமணியின் தோட்டத்திற்குக் குண்டர்களுடன் சென்ற, வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் கேவலமாகவும், தரக்குறைவாகவும் அவரை ஏசியுள்ளனர். அதோடு அவரது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குக் காரணமான வங்கி மேலாளர் உள்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாகவே இருப்பதைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதனால் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும். முதல்கட்டமாக குறைந்தபட்சம் வட்டியாவது தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசு ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி சமீபத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் வங்கி மோசடி செய்தவர்களின் கடன் ரூபாய் 68 ஆயிரத்து 670 கோடி தள்ளுபடி செய்தது நாட்டு மக்களுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கு மத்திய அரசின் போக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய விவசாயி ராஜாமணி அங்குள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் விவசாயக்கடன் பெற்றிருந்தார். தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனைக் கட்ட இயலவில்லை. எனினும் மிகவும் சிரமப்பட்டு குறிபிட்ட அளவுக்கு மேல் தவணைகளைச் செலுத்திவந்துள்ளார்.
கரோனா காலத்தில் அவரால் தொடர்ச்சியாக தவணையைச் செலுத்த இயலவில்லை. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்தக் காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று பல்வேறு வகைகளில் அறிவித்திருக்கிறது. இதை மீறுகிற வகையில் கடந்த இரு வாரங்களாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் ராஜாமணி தோட்டத்திற்குக் குண்டர்களுடன் சென்று தொடர்ந்து மிரட்டியிருக்கின்றனர். 'கடன் கட்ட முடியாத உனக்கு எதுக்குடா காடு, தோட்டம்' என்று மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் ஏசியுள்ளனர். அதோடு அவரது குடும்பத்தினரையும் வார்த்தைகளால் சொல்ல இயலாத வகையில் அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் கிராம மக்களிடையே அவமானப்படுகிற நிலை ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டறிந்த அவரது குடும்பத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனை, கோவை மருத்துவமனை என அழைத்துச் சென்று எவ்வளவு முயற்சி செய்தும் சிகிச்சை பலனிக்காமல் இறந்து விட்டார். இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உத்தரவுகளின் மீறி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்திலும் கடுமையான கடன் வசூலிப்புப் பணிகளின் ஈடுபட்ட தாராபுரம் நகர ஆக்சிஸ் கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோரின் அத்துமீறிய நடவடிக்கைகளின் காரணமாகத்தான் விவசாயி ராஜாமணி தற்கொலை செய்யப்பட்டார். இந்தத் தற்கொலைக்கு அவர்கள் தான் பொறுப்பாகும். எனவே, தற்கொலைக்குக் காரணமான இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், விவசாயி ராஜாமணி பெற்ற அனைத்துக் கடனையும் தள்ளுபடி செய்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்குக் காரணமான வங்கி மேலாளர் உள்பட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.