Skip to main content

“குடும்பங்கள் மீண்டெழ உதவுங்கள்” - தமிழக அரசை ஒரு சேர வலியுறுத்திய அன்புமணி, டிடிவி, சரத்குமார்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Anbumani, DTV, Sarathkumar urge Tamil Nadu government to help in Vaniyambadi issue

 

வாணியம்பாடியில் உதவிகள் வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உதவ வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் ஒரு சேர வலியுறுத்தியுள்ளனர். 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை ஐ.எம்.எக்ஸ் விளக்கு பின்புறத்தில், தைப்பூசத்தை ஒட்டி தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெண்கள் அங்கு குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர். இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி ராசாத்தி, வள்ளியம்மா, சின்னம்மா, நாகம்மா ஆகிய 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக இறந்தவர் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும், அடிப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்புமணி கூறியதாவது, “எத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி பெற்று காவல்துறையின் பாதுகாப்புடன் வழங்க வேண்டும். முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும். வாணியம்பாடியில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

இது குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது, “கூட்ட நெரிசலில் 4 பேர் சிக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. முன் அனுமதி பெற்று கூட்டம் நடந்த போதிலும் அதிகளவில் கூட்டம் குவிந்ததை காவல்துறையினர் கட்டுப்படுத்த தவறியது கண்டிக்கத்தக்கது” எனக் கூறியிருந்தார். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியதாவது, “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இருக்காது என்பதால் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி அவர்கள் குடும்பம் மீண்டு எழ உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்