தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை அமமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. தேமுதிக, அதிமுகவிலிருந்து வெளியேறி அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளைப் பெற்று இத்தேர்தலை சந்திக்கிறது. அதேபோல் அதிமுக கட்சியில் சீட் எதிர்பார்த்திருந்த ராஜவர்மன், அங்கு சீட் கிடைக்காமல் போக, அமமுகவில் இணைந்து இரண்டுமணி நேரத்தில் சாத்தூர் தொகுதி வேட்பாளரானார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சங்கர் குமார், ஈரோடு புறநகர் மாவட்ட அமமுக மாணவரணி செயலாளராக இருந்துவந்தார். சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட சங்கர்குமார் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்திருக்கிறார். ஆனால், அக்கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக என்.கே. துளசிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துளசிமணி, ஈரோடு மாவட்ட புறநகர் அமமுக இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட அமமுக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அதிருப்தி அடைந்த சங்கர், அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று (18.03.2021) அவர் நாய்க்கன் காட்டில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார். அதிருப்தியடைந்த சங்கரின் இந்த முடிவு அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.