Skip to main content

“கேட்டது கிடைக்கவில்லை; அதனால் இந்த முடிவு” - அமமுக வேட்பாளர் விளக்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

AMMK candidate Shiv Prashant withdraws from Erode East by-election

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

வேட்புமனு செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று மட்டும் 37 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஒட்டு மொத்தமாக 96 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

 

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்படும் என்பதன் காரணமாகத் தேர்தலில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'பின்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்' எனவும் டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை. இடைத்தேர்தலில் வழங்கப்படாது பொதுத்தேர்தலில் மட்டும் தான் வழங்கப்படும் என்ற காரணத்தினால் நாங்கள் இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெறுகிறோம். இதை கழக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். அதனை ஏற்று நானும் வாபஸ் பெறுகிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த வாக்காளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும் நன்றி” என் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்