“அனைத்து பாஜக தொண்டர்களும் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்களைத் தாண்டிதான் நீங்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும்” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா பேச்சிற்கு எதிராகவும் பாஜக நிர்வாகி பாலாஜி கைதினை கண்டித்தும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் பிற பாஜக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு பிரச்சனைக்காக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன் போராட்டம் செய்கிறான். தைரியமாக கருத்துக்களை சொல்லி சிறை செல்கிறான். இரண்டு வருடம் கழித்து எங்களின் மேல் எந்த காவல்துறை நண்பர்கள் எல்லாம் கை வைத்தீர்களோ உங்கள் மீது எந்த மாதிரியான துறை ரீதியான நடவடிக்கை வந்தாலும் நாங்கள் பொறுப்பல்ல. பணி ஓய்வு பெறும் பொழுது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் மாற்றப் படுவீர்கள். தமிழகத்தில் அனைத்து பாஜக தொண்டர்களும் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்களைத் தாண்டிதான் நீங்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும். அப்படி ஒரு காலத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள்” என கூறியுள்ளார்.