தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று (24.01.2025) காலை நடைபெற்றது. அப்போது புதியதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார். பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் சில மாவட்டங்களில் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்திருத்தது. தவெக மாவட்டச் செயலாளர்கள் பதவிகளுக்கு லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் த.வெ.க.வில் மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், இணை செயலாளர் உள்ளிட்ட 5 நிலையிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 20 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகப் பரணி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட செயலாளராக சிவக்குமார் நியமனம் சேலம் மத்திய மாவட்ட செயலாளராகப் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தவெகவில் மாவட்ட நிர்வாகிகள், நகரத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.