ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கியும், அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கான மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தாலும் முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் இருக்கும் என்பதால், மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான துணை நிலை ஆளுநரின் பொறுப்புக்கு இப்போதே போட்டி தொடங்கியுள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் போட்டியின் முதலிடத்தில் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த விஜய குமார் காவல் துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல பாதுகாப்பு படைகளில் விஜய குமார் பணியாற்றியுள்ளார். இன்னும் மத்திய அரசிடம் இருந்து அதிகார பூர்வ தகவல் இது குறித்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது.