திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அண்ணாமலை இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என சொல்கிறார். அதிமுக ஆட்சியில் இல்லையா’ எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “2006 முதல் 2011 வரையில் ஆட்சியில் இருந்த கட்சியை சொல்லியிருப்பார். நான் ஏன் தப்பிக்க நினைக்கிறேன். மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். சிபிஐ பற்றியோ அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றிற்கு பயம் இல்லை. 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் சொன்னீர்கள் அல்லவா, நீங்கள் சிபிஐயை ஏவி விடுங்கள் உறுதி செய்யுங்கள். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை குறித்து உறுதி செய்யுங்கள். அண்ணாமலை அதிமுக என்று சொல்லட்டும். உங்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
உடனே செய்தியாளர், ‘இதைவிட உங்களால் எப்படி சமாளிக்க முடியும். இல்லவே இல்லை என்கிறீர்கள்’ எனக் கேட்டார். தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலைக்கு இப்பொழுதும் சவால் விடுகிறேன். நாளைக்கே அதிமுக ஆட்சியில் உள்ள சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என சொல்லட்டும். அதன் பின் நான் சொல்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், அண்ணாமலையினைப் பார்த்து பயப்படுகிறீர்களா? எனக் கேட்டார். அதற்கு ஜெயக்குமார், “பயப்பட எல்லாம் இல்லை. அதிமுக என்று அவர் சொல்லட்டும். எங்கள் பதில் எப்படி வருகிறது என்று பாருங்கள். சொத்துப் பட்டியலை வெளியிடட்டும். அதிமுக என சொல்லி சொத்துப் பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம்” என்றார்.