சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக சிவகங்கை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின் அமமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆட்களைப் பிடிப்பதற்கே 200 முதல் 300 கோடி ரூபாய் பணத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் செலவிட்டுள்ளனர். கட்சியில் எல்லாம் பிரச்சனை இல்லை. இப்பொழுது கூட இரண்டு பேர் சென்றார்கள். எம்ஜிஆர் நினைவு நாளுக்கு கூட வந்தார்கள். அவர்களை விசாரணைக்காக அழைத்திருந்தேன். ஆனால் வரவில்லை. கட்சியில் இன்னொருவர் மேல் தவறான புகார் கொடுத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் மேல்தான் தவறு எனத் தெரிந்தது. அதனால் சென்றுவிட்டார்கள்.
கட்சியிலிருந்து யாராவது ஒரு நிர்வாகியை பழனிசாமி தரப்பினர் பிடித்தார்கள் என்றால் அடுத்த நாளே அவரை விடத் திறமையாகவோ அவருக்குச் சமமாகவோ நிர்வாகிகளை நியமித்துவிடுவோம். அது பெரிதாக எங்களைப் பாதிக்காது. இரண்டு தினங்களுக்குச் செய்தியாக இருக்கும் அவ்வளவுதான். அமமுக அமைப்பு தமிழகம் முழுவதும் இருப்பதால்தான் பழனிசாமி ஆட்களைப் பிடுங்கிக் கொள்கிறார்.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துத்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு வேலை அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்தும் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்” எனக் கூறினார்.