திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தனித் தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியை அதிமுக தக்கவைத்துள்ள நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏவாக தேன்மொழி இருந்து வருகிறார். அவர், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.
அதோடு தேன்மொழியுடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்து காத்திருக்கின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை தொகுதியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேன்மொழி போட்டியிட்டு 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்” எனக் கூறினார். அந்த அளவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளராக தேன்மொழி இருந்து வருவதால், நிலக்கோட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிமுகவினர் ஒருபுறம் அடித்துக் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், தான் போட்டியிடுவதற்கு நிலக்கோட்டை தொகுதியைக் கேட்டுப் பெற அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ‘நிலக்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் பரவிக்கொண்டிருக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாத நிலையில் இப்போஸ்டர் வெளியானது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.