சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உங்கள் பேரன்போடு முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ஆறாவது முறையாக தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்துள்ள திமுக ஆட்சி சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக்கூட்டங்கள் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் 1222 கூட்டங்கள் நடப்பது இதுவே முதல்முறை. இதுவரை நடைபெறாத ஒரு எண்ணிக்கை. இது ஒரு வரலாற்று சாதனை. நமது சாதனைகளை 100 கூட்டத்திலோ 200 கூட்டத்திலோ சொல்லி விட முடியாது. ஆயிரம் கூட்டத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு நாம் சாதனைகளை செய்திருக்கிறோம். அதனால் தான் 1222 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈராயிரம் ஆண்டுகள் அன்னை தமிழகம் தவம் இருந்து பெற்று எடுத்த தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பல்லாவரம் பகுதியில் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்; மகிழ்ச்சி அடைகிறேன்; பூரிப்படைகிறேன். நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் 10 ஆண்டுகாலம் எப்படி இருந்தது தமிழ்நாடு. பாழ்பட்டுக் கிடந்தது. முதல் 5 ஆண்டுகாலம் தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஜெயலலிதா இருந்தார். சிறைக்குப் போனார்; திரும்பி வந்தார்; உடல் நலம் பாதிக்கப்பட்டார்; மறைந்தும் போனார். சசிகலா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் உட்கட்சிப் பதவிப் போட்டியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் சீரழிந்தது. திமுக ஆட்சி மீண்டும் வராதா என ஏங்கிக் கிடந்த தமிழ்நாட்டு மக்கள் தாகம் தீர்க்க 2021 மே மாதம் உதயமானது தான் உதயசூரியன் ஆட்சி.
இரண்டு ஆண்டு காலத்தில் 10 ஆண்டுகால பாதாளத்தை சரி செய்துள்ளோம். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை 2 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அமைய வேண்டும் எனத் திட்டமிட்டோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டோம். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு என ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் பெரியார், அண்ணா, கலைஞர் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றார்.