சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் டிச. 13 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாமல் அது தள்ளிவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்கள் தள்ளிவைக்கப்பட்ட மாவட்டங்களில் நேற்று அதிமுக ஈபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னையில் மட்டும் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பாஜக தலைவரைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், அண்ணாமலை திடீரென பாஜக தலைவராக ஆகிவிட்டார். அவரை பார்த்தால் அமாவாசை சத்தியராஜ் தான் ஞாபகத்திற்கு வருவதாகக் கூறினார். மேலும் பேசிய அவர், “பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது என அதிமுகவினர் சொன்னால், இல்லை எனச் சொல்லிவிட்டுப் போங்கள். அதை விட்டுவிட்டு இரண்டாம் கட்ட தலைவர் மூன்றாம் கட்ட தலைவர் என ரேங் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.