கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தனுடன் சசிகலா ஃபோனில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை பேரூராட்சியைச் சேர்ந்த மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் துணைச்செயலாளர் வேங்கையன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோருடன் சசிகலா சமீபத்தில் ஃபோனில் பேசியுள்ளார்.
இதனையடுத்து வேங்கையன் உட்பட சில அதிமுகவினர், ‘தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்றும், அதிமுகவை தலைமை ஏற்க அவர்தான் தகுதியானவர் என்று, ‘சின்னம்மா தலைமை ஏற்க வா தாயே’ என போஸ்டர் அடித்து உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சித் தலைமை, வேங்கையன், ஆனந்த் ஆகிய இருவரும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர்கள் 2 பேரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக அவருடன் ஃபோனில் கட்சி நிர்வாகிகள் பேசிவருகின்றனர். அப்படிப் பேசும் கட்சியினரைக் கட்சியில் இருந்து நீக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சசிகலா அரசியலுக்கு வருவாரா? அவரால் கட்சியைக் கைப்பற்ற முடியுமா? கட்சியினரை வழிநடத்த முடியுமா? அவரோடு கட்சிக்காரர்கள் இணைவார்களா? இப்படி பல்வேறு பரபரப்பான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் சமீப நாட்களாக எழுந்துள்ளது.